தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பட்டாசு கடைகள், அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் இயங்குகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, கே.கே.சாலை, கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் டி.மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருக்கக்கூடாது என்றும் விதிகளை மீறி இயங்கினால் சம்பந்தப்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.மோகன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ, தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். விழுப்புரம் நகரில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பட்டாசு மொத்த வியாபார கடை ஒன்றில் தரைத்தளம் பகுதியில் மட்டும் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுவிட்டு அந்த கடையின் முதல் தளம், 2-ம் தளங்களிலும் மற்றும் அவசர கால வழிப்பாதையிலும் பட்டாசுகளை அளவுக்கு அதிகமாக வைத்து விற்பனை செய்து வந்ததும், பாதுகாப்பற்ற முறையிலும் பட்டாசுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இதையடுத்து அந்த பட்டாசு மொத்த விற்பனை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதோடு அந்த கடையின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு பட்டாசு விற்பனை கடையில் தரைத்தள பகுதியில் மட்டும் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய உரிமம் பெற்றுவிட்டு அந்த கடையில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் பட்டாசுகளை பாதுகாப்பற்ற முறையில் அதிகளவில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த பட்டாசு விற்பனை கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரி விஜயபாபு தலைமையிலான அதிகாரிகள், சங்கராபுரத்தில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமீறி வைத்திருந்ததாக சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள 2 பட்டாசு குடோன்கள் மற்றும் மும்முனை சந்திப்பில் உள்ள ஒரு பட்டாசு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி குளத்து மேட்டு தெருவில் விதிமுறைகளை மீறி இயங்கிய 2 பட்டாசு கடைகளை கோட்டாட்சியர் சரவணன், தாசில்தார் விஜயபிரபாகரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.