விழுப்புரம்: மரக்காணத்தில் ராணுவ வீரர் வீட்டில் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை கொள்ளை சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோடு பகுதியில் வசிப்பவர் ஜோதி. இவர் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி இவர் மரக்காணம் அருகே கரிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ரேவதி தனது வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.




இவர் பள்ளி முடிந்தவுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டும் பீரோக்குள் இருந்த பொருட்கள் பல இடங்களில் சிதறி கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ரேவதி பீரோவில்தான் வைத்திருந்த நகையை பார்த்து உள்ளார் அப்போது பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் இரண்டு செட் வெள்ளி கொலுசு ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் மரக்காணம் காவல் ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருடு போன வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.




மரக்காணத்தில் பழுதாகிய சி.சி.டி.வி. கேமராக்கள் 


 மரக்காணத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் சில வருடங்களுக்கு முன்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனை போலீசார் கண்காணிக்க, மரக்காணம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப் பட்டது. இவ்வாறு பல லட்சம் செலவில் மரக்காணம் சன்னதி தெரு, பள்ளிக்கூட தெரு, புதுவை ரோடு, மேட்டுத் தெரு, சக்திநகர், சால் ரோடு, பஸ் நிலையம் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டது. இந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பெரும்பாலானவை, அதாவது 90 சத வீதத்திற்கு மேல் பணி செய்ய வில்லை. இதனை சீர்செய்ய போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.




இதனால் முக்கிய இடங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கொலை, கொள்ளை போன்றவைகள் நடக்கும் போது, அங்குள்ள மக்களிடம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த போலீசார் வலியுறுத்துகின்றனர். ஆனால், அரசால் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களின் பழுதுகளை நீக்கி சரி செய்ய போலீசாருக்கு மனம் வரவில்லை. எனவே, மரக்காணம் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.