விழுப்புரம்: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அரளி விதையை அரைத்து குடித்து முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை கொலை செய்ய காரில் பட்டா கத்தியுடன் சென்ற மூவரை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.

காரில் பட்டா கத்தியுடன் கொலை செய்ய முயற்சி

திண்டிவனத்தில் மணி பாலன் என்பவர் சிங்கனூரை சார்ந்த செந்தில் குமாரிடம் 4 லட்சம் பணம் மற்றும் 15 சவரனை கடனாக கடந்த 8 மாதங்களுக்கு முன் பெற்றுள்ளார். அதனை மணிபாலனிடம் செந்தில்குமார் கேட்டபோது தரமறுத்து அரளி விதையை மணிபாலன் அரைத்துகுடித்துவிட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் மணிபாலனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு செந்தில் குமார் பணம் கேட்டபோது உன்னால் தான் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதனால் நீயே எனக்கு மூன்று லட்சம் தர வேண்டுமென மணிபாலன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது சென்னையை சார்ந்த நண்பர்களாக சையத் முஸ்தபா, நவீன் என்ற இருவர் மூலம் மணிபாலனை கொலை செய்ய திட்டம் தீட்டி திண்டிவனத்தில் தங்கியிருந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கே சென்று மணிபாலனை கொலை செய்ய திட்டம்

மூன்று நாட்களுக்கு மேலாகியும் மணிபாலன் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பாததால் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கே சென்று மணிபாலனை கொலை செய்ய திட்டம் தீட்டி காரில் சென்றபோது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது போலீசார் செந்தில்குமார் காரினை சோதனை செய்தபோது காரில் பட்டா இருப்பது தெரியவந்தது இதனையடுத்து செந்தில்குமார், நவீன், சையத் முஸ்தபா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 விசாரணையின் போது முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிபாலனை கொலை செய்ய சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குற்றவாளிகள் மூவரிடம் இருந்த பட்டா கத்தி காரினை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.