திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் கடந்த 2 மாதங்களாக மதிய உணவு நேரத்தில் பைனான்ஸ் கடைகள் மற்றும் ஸ்டுடியோக்களில் புகுந்து பணத்தை திருடி கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் கொடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, காவல்துறையினர்  விசாரணை நடத்தி வந்தனர். நிலையில் செய்யாறு அடுத்த விண்ணவாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (34) இவர், செய்யாறு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள கட்டிடத்தில் உள்ள சிறிய அளவில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சக்திவேல் கடந்த 6ஆம் தேதி மதியம் 1 மணியளவில், பைனான்ஸின் கண்ணாடி கதவை பூட்டிக்கொண்டு, தனது ஊழியர் முருகேசன் என்பவருடன், மதிய உணவு சாப்பிட வெளியே உணவகத்திற்கு சென்றுள்ளார். 



அதனை தொடர்ந்து , மதியம் 3 மணியளவில் இருவரும் உணவு சாப்பிட பிறகு கடைக்கு திரும்பினர். அப்போது, பைனான்ஸின் கண்ணாடி கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் அலறி அடித்து கொண்டு கடையின்  உள்ளே சென்ற போது, மேசை உள்ள லாக்கர் திறக்கப்பட்டு, அதிலிருந்த 34 ஆயிரம் ரூபாய் திருட்டுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து சக்திவேல் செய்யாறு காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


மேலும், ஏற்கனவே திருட்டு போன பைனான்ஸ், கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர்  தீவிரமாக குற்றவாளிகளை  தேடும் பணியில்  ஈடுப்பட்டனர். அதில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் 2 பேர் கடைகளுக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. மேலும், அந்த சிசிடிவி காட்சிகளும் சிலரது தொலைப்பேசியில் உள்ள வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதை பார்த்த ஒரு  சில, பொதுமக்கள் அந்த மர்ம ஆசாமிகள் 2 பேரும் செய்யாறு மண்டித்தெருவில் ஒரு கடையின் அருகே இருந்ததை கண்டு பொதுமக்கள் 2 கொள்ளையர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர். அதன் பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்து பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 



விசாரணையில்  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, தொண்டிப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (27), அவரது கூட்டாளியான ஈரோடு மாவட்டம், நாப்பியாலம் கிராமம் வளையல்கார தெருவை சேர்ந்த அருண்குமார் (30) என்பதும், இவர்கள் இருவரும் சிறையில் நண்பர்களான இவர்கள் செய்யாறு பகுதியில் பைனான்ஸ், கடைகள், ஸ்டுடியோவில் மதிய உணவு நேரத்தில் கண்ணாடி கதவை உடைத்து பணத்தை திருடிவந்ததும் தெரியவந்தது. மேலும், சக்திவேலின் பைனான்ஸ் நிறுவனத்தில் திருடியது இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்ப திவு செய்த காவல்துறையினர் மோகன்ராஜ், அருண்குமார் ஆகிய 2 நபர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 12,500 ரூபாய் காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.