ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், மதுபானம் வழங்க ஊழியர்கள் மறுத்ததால், மதுபான விடுதி ஒன்றில் நேற்றிரவு ஒருவர் டி.ஜே.,வை (கொண்டாட்ட மேடைகளில் இசையை தொகுப்பவர்)  சுட்டுக் கொன்றார். ஷார்ட்ஸை மட்டும் அணிந்து கொண்டு ராஞ்சியில் உள்ள எக்ஸ்ட்ரீம் பாரில் துப்பாக்கிச் சூடு நடத்தியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கொலையாளி தனது டி-சர்ட்டால் முகத்தை மூடியபடி துப்பாக்கியால் டி.கே.,வை சுட்டுக் கொன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


கொலையாளியும் அவரது மூன்று கூட்டாளிகளும் நள்ளிரவு 1 மணி அளவில் மதுபான விடுதி மூடப்பட்ட பின்னர், மதுபான விடுதி ஊழியர்களிடம் மது கேட்டு வந்துள்ளனர். அதற்கு மதுபான விடுதி ஊழியர்கள் தரப்பில் மது விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைக் கடந்துவிட்டதால், மது விநியோகம் செய்ய முடியாது எனக் கூறி மறுத்துவிட்டனர்.  ஆனால் கொலையாளியும் அவரது கூட்டாளிகளும் மதுபான விடுதி ஊழியர்கள் சொன்னதை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து மதுபான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இறுதியில் இந்த வாக்குவாதம் மோதலாக மாறும் நிலைக்கு வந்தது. இதில் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து மிரட்டியது மட்டும் இல்லாமல், மதுபான விடுதி ஊழியர்களில் ஒருவரான டி.ஜே.,வை  சுட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு காயம்பட்ட டி.ஜே., சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்தார். 


டி.ஜே.,வைச் சுட்ட அந்த கொலையாளி தனது கூட்டாளிகளுடன் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக தப்பிவிட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த டி.ஜே.,வை மதுபான விடுதி ஊழியர்கள் அருகில் இருந்த ராஞ்சி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு கொண்டு செல்லப்பாட்டார். ஆனால் அங்கு டி.ஜே.,வை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். 






இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எக்ஸ்ட்ரீம் மதுபான விடுதிக்கு வந்த ராஞ்சியின் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் சின்ஹா ​​தலைமையிலான காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் சின்ஹா ​​செய்தியாளர்களிடம், “ மது மறுக்கப்பட்டதால், கொலையாளிகளுக்கும், பார் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, ​​கொலையாளி துப்பாக்கியை எடுத்து வந்து, டி.ஜே.யை அவரது மார்பில் சுட்டார். சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடிவிட்டார் மற்றும் காயமடைந்த DJ ராஜேந்திரா என்பவர் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (RIMS) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்” எனக் கூறினார். 


துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பார் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.