அண்மைக்காலமாக வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக இரயில்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்துவது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க காட்பாடி இரயில்வே பாதுகாப்பு படையினர் இரயில் நிலையம் மற்றும் இரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இன்று சென்னை-மங்களூரு விரைவு ரயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.
ரயிலில் ஏறி பாதுகாப்பு படையினர் சந்தேகம்படும்படி யாராவது உள்ளார்களா என தேடினர் அதில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த பாதுகாப்பு படையினர். அதில் 8 கிலோ கஞ்சா வைத்து இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மூன்று நபர்களையும் பிடித்து வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து இவர்கள் மூவரையும் கைது செய்த போதை பொருள் தடுப்புப்பிரிவினர் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் இரயில் மூலம் கஞ்சா கடத்திய கேரள மாநிலம் மணப்புரம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (53), முகமது அனீஷ் சபி(21), முபாரக் (31) ஆகிய 3 பேரும் சென்னையில் இருந்து மங்களூர் கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா எனவும், சென்னையில் யாரிடமிருந்து கஞ்சா வாங்கினார்களா எனவும் 3 பேரும் இதற்கு முன்பு இதுபோன்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே நிலையம் வழியாகத்தான் இரயில் கடந்து செல்கின்றன. இதில் பலதரப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ரயில் மூலமாக பல கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக ஒவ்வொரு ரயிலிலும், சென்று
தொடர்ந்து சோதனையை இரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ரயில்கள் மூலம் 50 கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது