வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான நேஷ்னல் திரையங்க பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ளது, பிரபல நகை கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் நேற்று (டிச 15) நள்ளிரவு சுவற்றை துளையிட்டு சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் என பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் 457, 380 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில் கொள்ளை நடந்த நகைக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (டிச 16) மாலை வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் (IG) சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் (DIG) பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இது குறித்து எஸ்.பி ராஜேஷ் கண்ணாவிடம் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டார்.




ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு ஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி காமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகி உள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளது அதனை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என்றார். இது போன்ற பல வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளது. மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், அந்த குற்றவாளியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.




மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக தனிப்படை காவல் துறையினர் நகை கடை பணியாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகள், சாலைகளில் உள்ள சிசிடிவிக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். 4 டிஎஸ்பிக்கள் ஒரு ஏ.எஸ்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 8 தனிப்படையினரில் ஒரு குழு ஆந்திர மாநிலத்திலும், ஒரு குழு கர்நாடக மாநிலத்திலும் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.