90ஸ் கிட்ஸ்களில் பெரும்பாலானோருக்கு மிகவும் பரிச்சயமான மார்வெல் சூப்பர்ஹீரோ ஸ்பைடர்மேன். சாம் ரெய்மியின் `ஸ்பைடர்மேன்’ மூன்று பாகங்களும் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். ஆனால் அதன்பிறகு வெளிவந்த `ஸ்பைடர்மேன்’ படங்களில், குறிப்பாக தற்போதைய `அவெஞ்சர்ஸ்’ படத்திற்குப் பிறகான டாம் ஹாலண்ட் நடிக்கும் ஸ்பைடர்மேன் படங்களில் முன்பிருந்த சீரியஸ் தன்மை குறைந்திருப்பதாக விமர்சனங்கள் உண்டு. இந்த விமர்சனங்களைச் சரிசெய்து அனைவருக்கும் ஸ்பெஷல் விருந்தாக வெளிவந்திருக்கிறது `ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’.


முந்தைய பாகமான `ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தின் இறுதிக் காட்சியில் மிஸ்டீரியோவால் ஸ்பைடர்மேனின் அடையாளம் பகிரங்கப்படுத்துவாக முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக, பீட்டர் பார்கர் தன் வாழ்க்கையில் புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறான். பீட்டரின் அடையாளம் வெளிவந்ததால், அவனின் காதலி எம்.ஜேவும், நண்பன் நெட்டும் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். பீட்டர் தன் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகத் தடைபட்டு போனதால், அதில் இருந்து விடுதலை வேண்டி டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் செல்கிறான். உலகத்தில் உள்ள அனைவரும் பீட்டர் பார்கர் தான் ஸ்பைடர்மேன் என்பதை மறந்துவிடுமாறு செய்ய வித்தை ஒன்றை இறக்குகிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அதில் சில சொதப்பல்கள் ஏற்பட, வெவ்வேறு இணைப் பிரபஞ்சங்களில் இருந்து ஸ்பைடர்மேனின் எதிரிகள் இந்த உலகத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள வேண்டிய கடமையைக் கண் முன் வைத்திருக்கும் பீட்டருக்கு என்னவானது, அவனது அடையாளம் வெளிபடுத்தப்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்ததா என்பதை விறுவிறுப்பாகவும், அதே வேளையில் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்கிறது `ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’. 



முந்தைய பாகங்களில் வந்த ஸ்பைடர்மேன்களை விட டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் வயதில் குறைந்த பாத்திரம். தன் மீதுள்ள பொறுப்பு குறித்த புரிதல், வாழ்க்கையின் கசப்புகளை எதிர்கொள்ளுதல், இரண்டாம் வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள்ளல் முதலான தத்துவங்களை டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் கற்றுக் கொள்வதாக அமைந்திருக்கும் இந்தப் படம், இதுவரை வெளிவந்த ஸ்பைடர்மேன் திரைப்படங்களிலேயே மிகச் சிறந்ததாக மாறியுள்ளது. அனைத்து ஸ்பைடர்மேன் ரசிகர்களும் கடந்த சில மாதங்களாக பெரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்ததால், அதனைக் கையாளும் ரிஸ்க் பெரியது. அதனையும் சமாளித்திருக்கிறது இந்தத் திரைப்படம். அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் முன்பு இருக்கும் சவால்களின் தொடக்கத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறது.


அனைத்து ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கும் விதமாக திரைக்கதையைச் செதுக்கியிருக்கிறார்கள் க்றிஸ் மெக்கன்னா, எரிக் சொம்மர்ஸ் ஆகியோர். சுமார் இரண்டரை மணி நேரத் திரைப்படத்தின் சில இடங்களில் வேகம் சறுக்கினாலும், மொத்தமாக சிறப்பாக வந்திருக்கிறது இந்த ஸ்பைடர்மேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என மார்வெல் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் தொழில்நுட்பத் துறைகள் இதிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. அத்தனை வில்லன்கள் இருந்தும் நம்மை ஈர்க்கிறார் வில்லெம் டெஃபோ. டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக வரும் பெனிடிக்ட் கம்பர்பேட்ச், ஆல்ஃப்ரெட் மொலினா, ஜேமி ஃபாக்ஸ் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.  



படத்தின் கதை இதுவாகத் தான் இருக்கும் என இணையத்தில் பெரும்பான்மையானோரால் வைக்கப்பட்ட யூகமே கதையாக இருந்த போதும், அதனைச் சிறப்பாக மாற்றுவது அதன் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் தான். அந்தப் பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் ஜான் வாட்ஸ். மேலும் அவர் முயன்றிருக்கும் நாஸ்டால்ஜியா, கூஸ் பம்ப்ஸ், காமெடி எனப் பல உணர்வுகளும் இணைந்து கச்சிதமாக வேலை செய்திருக்கின்றன. 


ஸ்பைடர்மேன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறது `ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’. `அவெஞ்சர்ஸ்’ ரசிகர்களுக்கும், `ஸ்பைடர்மேன்’ ரசிகர்களுக்கும் இந்தப் படம் சிறப்பான அனுபவமாக இருக்கும். முந்தைய படங்களைப் பார்க்காதவர்களுக்கும் காட்சியமைப்புகள் கொண்டாடத்தக்கதாக இருக்கும். 


`ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரையரங்கங்களில் வெளியாகியுள்ளது.