சமீப காலங்களாக சென்னையில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அரும்பாக்கத்திலுள்ள ஃபேட் வங்கியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. அந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் தற்போது சென்னையில் மேலும் ஒரு திருட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் வடபழனியின் மன்னார் முதலி தெருவில் ஓசோன் கேபிட்டல் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இதை சரவணன் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு நபர்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக அந்த அலுவலகத்தில் பண புழக்கம் அதிகமாக இருந்துள்ளது.
8 பேர் கொண்ட மர்ம கும்பல்:
இதை சில மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இந்த நிதி நிறுவனத்தில் பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்து வந்தனர். அந்த சமயத்தில் திடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று முகமூடி அணிந்துவாறு அலுவலகத்திற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு இருந்த ஊழியர்களாக தீபக் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகிய இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன் அவர்களை கட்டி போட்டுவிட்டு அங்கு இருந்த 30 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தீபக் மற்றும் சஞ்சீவ் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர். வடபழனி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் பார்த்துள்ளர். அதன்பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் இக்பால் என்ற நபர் மட்டும் சிக்கியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் எஞ்சிய 7 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் ஒரு வாரத்திற்குள் இரண்டு பெரிய கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கம் திருட்டு சம்பவம்:
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன் உள்பட குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர்.
இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முருகன் திருமங்கலம் காவல்நிலையத்தில் நேற்று நேரில் வந்து சரணடைந்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், முருகன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முருகன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “அரும்பாக்கம் வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்கு வங்கியில் எந்த இடத்தில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் என்று நன்றாகவே தெரியும். வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன். பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், வங்கியில் கொள்ளையடிப்பதற்காக நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டேன். கொள்ளைக்கு தேவையான பைக், கார்கள் தேவைப்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் உதவினர். அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்