டிஜிட்டல் இந்தியா என ஆளும் அரசிலிருந்து இந்தியாவில் வாழும் பெரும்பாலானோர் மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் டிஜிட்டல் ரீதியாக எவ்வளவு முன்னோக்கி நகர்ந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதும், அவர்களை ஒதுக்குவதும் இன்னமும் நடந்துகொண்டே இருக்கிறது.


உத்தரகாண்ட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் போஜன்மாதாவாக ( மதிய சமையல்காரர்) ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சுனிதா தேவி என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் சமைத்த மதிய உணவை ஆதிக்க சாதி மாணவர்கள் புறக்கணித்தனர். 


முற்பட்ட சாதி பெண்ணான சகுந்தலாதேவிக்குப் பதிலாக சுனிதா தேவி டிசம்பர் 13ஆம் தேதி அன்று போஜன்மாதாவாக நியமிக்கப்பட்டார். தேவி பணிக்கு சென்ற முதல் நாளில், அனைத்து மாணவர்களும் ஒன்றாக அவர் சமைத்த மதிய உணவை சாப்பிட்டனர்.


ஆனால் ஒரு நாள் கழித்து, 6 முதல் 8ஆம் வகுப்புகளில் படிக்கும் 40 உயர்சாதி மாணவர்கள் பள்ளியில் உணவு உணவை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வர தொடங்கினர்.


சுனிதா தேவியின் சாப்பாட்டை புறக்கணித்த மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி  புஷ்பா பட் என்ற பிராமணரை சமையலுக்கு நியமனம் செய்யாமல் தேவியை நியமனம் செய்திருக்கிறார்கள் என குற்றமும்சாட்டினர். இதனையடுத்து அவர் நியமனம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறிய அதிகாரிகள் சுனிதா தேவியை வேலையிலிருந்து நீக்கினர். இதுகுறித்து சம்பாவத் மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி ஆர்.சி. புரோஹித் கூறுகையில், “போஜன்மாதா நியமனத்தில் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதை விசாரணையின்போது கண்டறிந்தோம். இதற்குப் பிறகு, நாங்கள் ஒருமனதாக தலித் போஜன்மாதா நியமனத்தை ரத்து செய்தோம். வேண்டுமானால் சுனிதா தேவி தற்போது மீண்டும் விண்ணப்பிக்கலாம்


விதிமுறைகளின்படி போஜன்மாதா நியமனத்திற்கு முன்  DEOவிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அதனை பின்பற்ற பள்ளியின் முதல்வர் தவறிவிட்டார்” என்றார்.


அவரைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்று, மாவட்ட துணைக் கல்வி அதிகாரி (DEO) அன்ஷு பிஷ்ட் பள்ளி நிர்வாகக் குழு (SMC), பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) மற்றும் கிராமத் தலைவர் ஆகியோரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.


மேலும், புதிய சமையல்காரர் நியமிக்கப்படும்வரை முற்பட்ட சாதியை சேர்ந்த பெண் ஒருவர் போஜன்மாதாவாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு மாணவர்களின் பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


“கல்வி அதிகாரிகளின் விசாரணை மற்றும் முடிவால் பெற்றோர்கள் திருப்தி அடைந்துள்ளனர். நியமனம் செய்வதற்கான செயல்முறை மீண்டும் நடத்தப்பட வேண்டும். போஜன்மாதா நியமனத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும் என நம்புகிறோம். முற்பட்ட சாதிக் குழந்தைகள் புறக்கணிப்பை கைவிட்டு, முன்பு போலவே மதிய உணவு சாப்பிடுகிறார்கள், ”என்று PTAஇன் தலைவர் நரேந்திர ஜோஷி கூறினார்.


அதேசமயம் தேவி பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் தலைவர் பி.சி.திவாரி கூறுகையில்,  “ஒடுக்கப்பட்ட பெண் சமைத்த மதிய உணவை முற்பட்ட சாதி மாணவர்கள் புறக்கணிப்பது சமூகக் கொடுமை. இந்த நிலையில், அதிகாரிகள் மீண்டும் சுனிதா தேவியை நியமித்து, முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண