இந்தியாவில் தொடர்ந்து தற்கொலை தொடர்பான செய்திகள் பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுவர் சிறுமியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் சமீப காலங்களில் அதிகமாக பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி தனக்கு பிடித்த உணவை தாய் சமைத்து தரவில்லை என்று கூறி சிறுமி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு பிடிக்காமல் போனதாக தெரிகிறது. இதன்காரணமாக தன்னுடைய தாய் உடன் அவர் சண்டையிட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அச்சிறுமி அன்று இரவு உணவு சாப்பிடாமல் மாடியில் தன்னுடைய அறையில் சென்று கதவை பூட்டியுள்ளார். 


 


அதன்பின்னர் நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை என்பதால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். அவர்கள் அச்சிறுமி அறையின் கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது அச்சிறுமி கதவை திறக்காததால் கதவை உடைக்க குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அந்த அறையின் கதவை உடைத்து பார்த்த போது அச்சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.


 


அந்தச் சிறுமியின் உடலை இறக்கி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அச்சிறுமியின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் சமைத்த உணவு பிடிக்காமல் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050