உத்தர பிரதேசத்தில் முத்தலாக் மூலம் விவாகரத்து வழங்கப்பட்ட பெண்ணை, அவரது கணவரும், கணவரின் இளைய சகோதரரும் இணைந்து பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்லாமிய மதகுரு உள்பட பலரின் உதவியோடு இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இச்சூழலில், ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


அந்த பெண் அளித்த புகாரின்படி, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சல்மான் அவரை ‘முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்துள்ளார். சல்மான், மதகுருவான குட்டு ஹாஜியின் ஆலோசனையின் பேரில், அந்த பெண்ணிடம், தனது தம்பியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தால், அவரை மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.


சல்மான சொன்னபடி அவர் செய்த பிறகும், இளைய சகோதரர் அவரை விவாகரத்து செய்ய மறுத்துவிட்டார். இதற்கு மத்தியில், சகோதரர்கள் இருவரும் மாறி மாறி அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.


இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறுகையில், "சல்மான் வாக்குறுதி அளித்ததன் பேரில், அந்தப் பெண் அவரது சகோதரர் இஸ்லாமை மணந்தார். ஆனால், இஸ்லாம் அவரை விவாகரத்து செய்ய மறுத்துவிட்டார். அதன்பிறகு, சல்மான் மற்றும் இஸ்லாம் இருவரும் தன்னை பல சந்தர்ப்பங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.


அந்தப் பெண் தனது புகாருடன் உள்ளூர் நீதிமன்றத்தை அணுகினார். திங்களன்று நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில், குட்டு ஹாஜி, சல்மான், இஸ்லாம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர் மீதும், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019ன் பிரிவுகளின் கீழ், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் இயற்கைக்கு மாறான பாலுறவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.


மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.


கடந்த 2017ஆம் ஆண்டு, முத்தலாக் முறை சட்ட விரோதம் எனக் கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.



குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் குற்ற தரவுகளின்படி, 1 லட்சத்து 12 ஆயிரத்து 292 பெண்களிடமிருந்து காவல்துறை புகார்களைப் பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடக்கிறது.




இத்தகைய வன்முறை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்று சொல்ல முடியாது. உலகளவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்கின்றனர். அதில் பெரும்பாலானவை நெருங்கிய துணையால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.