உத்தரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு போதை ஊசி போட்டு மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மிரட்டி தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண் மூலம் முதலமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள திபிநகர் கிராமத்தில் வசிக்கும் பெண் நோயாளி ஒருவர் நான்கு மாதங்களுக்கு முன், அந்த கிராமத்தை சேர்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிற்கு சிகிச்சை என்ற பெயரில் மருத்துவர் போதை ஊசி செலுத்தியுள்ளார். பின்னர் யாரும் இல்லாததை உறுதி செய்தபிறகு, பெண்ணிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து வன்கொடுமை செய்வதை வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவேன் என மிரட்டி பலமுறை எல்லை மீறியுள்ளார்.
மேலும், அந்த மருத்துவர் அந்த பெண்ணை தன்னுடனே தங்குமாறு வற்புறுத்தியும் வந்துள்ளார். இதற்குமேல் மறைத்தால் விளைவு பெரிதாகிவிடும் என்று பயந்துபோன அந்த பெண், தன் கணவரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது கணவர் திபிநகர் காவல்நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த அந்த பெண் அம்மாநில முதலமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு எட்டியதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
முன்கூட்டியே தகவலறிந்து கொண்ட குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் கிராமத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். அந்த பெண்ணின் புகாரில் தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்:
கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும்.
டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.
டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.
2021 இல், தேசிய தலைநகரில் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும். அனைத்து பெருநகரங்களிலும் மொத்தம் 8,664 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 1,357 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 833 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பெருநகரங்களில் மிக அதிகமாகும்.