உத்தரபிரதேசம், கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் நிலை தடுமாறி குளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (அக்.01) மாலை அம்மாநிலத்தின் ஃபதேபூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலுக்கு சுமார் 50 பேர் டிராக்டரில் பயணித்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கதம்பூர் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடர்ந்து டிராக்டர் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளம் ஒன்றில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ,தற்போது மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படுகாயமடைந்த பிறர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"கான்பூரில் நிகழ்ந்த டிராக்டர் விபத்தால் துயரமடைந்துள்ளேன். எனது எண்ணங்கள், தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனைகள். உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தரப் பிரதேசத்தின் மூத்த அமைச்சர்கள் ராகேஷ் சச்சன், அஜித் பால் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த இச்சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.