உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் ஒரு செவிலியரை இரண்டு பேர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குச்சியால் தாக்கப்பட்டதாகவும், அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூள் செருகப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த பெண் வேறொரு நபருடன் உறவில் இருந்ததாகவும், அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
NDTV-ன் அறிக்கையின்படி, அந்தப் பெண்ணின் கணவர், அவர் சுர்க்கி காவல் நிலையப் பகுதியில் செவிலியராக பணிபுரிவதாகவும், வியாழக்கிழமை காலை வேலைக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகவும் கூறினார். இதற்கு நடுவே, அந்த பெண் சில நபர்களால் வழிமறித்து புதர்களுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "செவிலியராகப் பணிபுரியும் என் மனைவி காலை 9 மணியளவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து நடந்ததைச் சொன்னாள். ஒரு ஆண், அவருடைய மருமகன் மற்றும் சிலர் அவளை அடித்துள்ளனர். நான்கு பேர் அவளை வழிமறித்துள்ளனர். இரண்டு பேர் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் குச்சியால் தாக்கியதோடு அவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை சொருகியுள்ளனர், அவரை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்” என்றார்.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குமார் வர்மா கூறுகையில், ”ஒரு பெண் தாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கின் உண்மைகளை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன” என்றார்.