உத்தரபிரதேச மாநிலத்தில் போலியான ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் சுமார் 30,000  ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 


ரூபாய் நோட்டு அச்சடிப்பு


உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சதீஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா ஆகியோர் அச்சக கடை வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த அச்சகத்தில், தண்ணீர் பாட்டில்கள் விளம்பரங்களை அச்சிடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்திருக்கின்றனர். 


இந்நிலையில், இவர்கள் போலியான ரூபாய் நோட்டுக்களை அச்சிடிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து , அச்சகத்திற்கு சென்று விசாரணையில் இறங்கினர். இதையடுத்து , போலியான ரூபாய் நோட்டுகள் மற்றும் அச்சு இயந்திரங்களை கைப்பற்றி, இரண்டு நபர்களை கைது செய்தனர். 


இதையடுத்து, போலி ரூபாய் நோட்டுகள் தவிர, ஆல்டோ கார், நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், 27 முத்திரைத் தாள்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
இவர்கள் அச்சிட்ட ரூபாய் நோட்டுகள், அசல் ரூபாய் நோட்டுக்களை போன்று இருந்ததாகவும் , மிகவும் நுண்ணியமாக ஆராய்ந்தால் மட்டுமே , போலி என ஆராய முடியும் என தகவல் தெரிவிக்கின்றன


காவல்துறை விளக்கம்:


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, கம்ப்யூட்டர் பிரிண்டரில் ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் போலி ரூ.500 நோட்டுகளை அச்சடித்து வந்திருக்கின்றனர். அவர்கள் அச்சடித்த அனைத்து ரூபாய் நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன.


அவர்களிடம் 500 ரூபாய்க்கான 20 போலி நோட்டுகளை நாங்கள் கண்டுபிடித்தோம். கரன்சி நோட்டுகளின் விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அவை உண்மையானவையா அல்ல பொய்யானவையா என்பதை யாராலும் அடையாளம் காண முடியும், என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலு சிங் கூறினார்.
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள்,  தங்கள் தொழிலாக மினரல் வாட்டருக்கு விளம்பரங்களை அச்சிடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் யூடியூப்பில் உள்ள வீடியோவைப் பார்த்து போலி  ரூபாய் நோட்டுகளை அச்சிட கற்றுக் கொண்டதாகும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், 2 நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போலியான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து , புழக்கத்தில் விட்டது அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.