சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில் சாலையை சேர்ந்த லட்சுமி நாராயணன். இவர் இரவு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 3 இளைஞர்கள் கொண்ட கும்பல் பூட்டை உடைத்து வாகனத்தில் திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கும்பலில், ஒரு வாலிபர் சபரிமலைக்கு மாலை அணிந்து இருப்பது காட்சியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக நள்ளிரவில் மக்கள் அனைவரும் உறங்கும் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு மூன்று இளைஞர்களும் இதே பகுதியில் வசிப்பது போன்று நடந்து வந்து இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்கின்றனர்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கும்பல் கடந்த வாரம் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள மேட்டுத் தெரு பகுதியில் சாருக் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றிருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக சேலம் மாநகரப் பகுதியில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பலை தேடிவரும் நிலையில் அதே கும்பல் மீண்டும் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.
இவர்களைப் பிடிக்க சேலம் மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சேலம் மாநகரப் பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே திருடர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என சேலம் மாநகர மக்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.