சேலம் மாநகர்  பகுதியை சேர்ந்த இளம் பெண் (20) ஒருவர், சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை ஆபாச வீடியோ எடுத்து சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் இரண்டு வார்டன்கள் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா வழக்கு குறித்து விசாரிக்க அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் லட்சுமி பிரியாவுக்கு உத்தரவிட்டார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சிறை காவலர் குடியிருப்பு பகுதிக்கு அஸ்தம்பட்டி காவல்துறையினர் சென்று அங்கு இருந்த வார்டன்கள் அருண் மற்றும் சிவ சங்கர் ஆகியோரை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்தனர். 



கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வார்டன் அருண் (வயது 30) மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த வார்டன் சிவசங்கர் (வயது 31) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டம் உட்பட 3 பிரிவினில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ் செல்வன் பெண் புகார் குறித்து விசாரணை செய்து கைது செய்யப்பட்ட அருண் மற்றும் சிவசங்கர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஏற்கனவே ஓமலூர் பகுதியில் தனியார் பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு நடந்ததாக எழுந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்துள்ளது. 



இந்த நிலையில் சேலம் பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது இளம்பெண்ணுடன் இரண்டு வார்டன்களுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது செல்போன் எண்ணை வாங்கி இருவரும் இந்த இளம்பெண்ணிடம் பேசியுள்ளனர். இந்த நிலையில் சேலம் மத்திய சிறை காவலர்கள் குடியிருப்புக்கு அடிக்கடி இரண்டு வார்டன்களும் அந்த பெண்ணை அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆபாச வீடியோ எடுத்து மிரட்டலில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரண்டு வார்டன்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய சிறை வார்டன்கள் மீது பெண் புகார் அளித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.