கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது சில சமயம் திருடர்களுக்கு பொருந்தி விடுகிறது. கூட்டு சில நேரத்தில் மோதலாக வரும் போது, அதுவே அவர்களுக்கு சிக்கலாகி விடுகிறது. தவறு செய்யும் போது ஒன்றாக இருந்துவிட்டு, பலன் கிடைக்கும் போது ஏற்படும் மோதலால் பல தவறுகள் வெளி வந்திருக்கிறது. அதற்கு இங்கு பல உதாரணங்களும் உண்டு. இப்போது நாம் பார்க்க போவதும் அது மாதிரியான தவறு தான்... ஒரு சிறு சண்டையில் அது அம்பலப்பட்டு போய் இருக்கிறது.
சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் இரவில் இருவர் நல்ல போதையில் சண்டையிட்டுக் கொண்டனர். அவ்வழியாக சென்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் சண்டை போடுகிறார்கள்... என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சமாக இருந்த நிலையில், யாரும் அவர்களிடம் நெருங்கிச் செல்ல வில்லை. இந்நிலையில் தான் சைரன் போட்ட ரோந்து போலீஸ் வாகனம் ஒன்று அவ்வழியாக வந்துள்ளது.
அதுவரை அடிதடியில் இருந்த அந்த போதை இளைஞர்கள், போலீஸ் வருவதை கண்டதும், அங்கிருந்து ஆட்டோவில் தப்பி ஓட முயன்றனர். சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய போது தான் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய ஆட்டோவில் இரு கோயில் உண்டியல்களும், துளையிடும் ட்ரில்லிங் மிஷினும் , கட்டிங் மிஷினும் இருந்துள்ளது.
பிறகு தான் விசாரணை சூடு பிடித்தது. வடபழனியைச் சேர்ந்த 21 வயதான சூர்யா, சாலிகிராமத்தைச் சேர்ந்த 40 வயதான சுரேஷ் அவர்கள் என்பதும், பிரபல உண்டியல் திருடர்கள் என்பதும் தெரியவந்தது. பகலில் ஆட்டோ ஓட்டி வரும் அவர்கள், ‛பார்ட் டைம்’ ஆக கோயில் உண்டியல்களை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து வடபழனியில் உள்ள கோயில்களில் உள்ள உண்டியல்களில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் இருவரும் மது போதையில் இருந்ததால், யாருக்கு அதிகம் என்கிற போட்டியில் மோதிக்கொண்டதால் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதைத் தொடந்து அவர்களிடமிருந்து உண்டியல்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட திருட்டுக் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யபப்பட்டன. அவர்கள் இவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் உண்டியல் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்