புனேவில் லாட்டரில் வென்ற ரூ.26 லட்சத்தைப்பெறுவதற்காக ரூ. 46 லட்சத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரினையடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


லக்கு இருந்தால் லாட்டரில் எப்படியாவது பணத்தை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் லாட்டரி சீட்டுகள் வாங்கிய காலங்கள் உண்டு. விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்ற வாசகத்துடன் தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாத்துரை அறிமுகம் செய்தார். ஆனால் போலி லாட்டரி டிக்கெட்டுகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதால் லாட்டரி விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்த போதும் வெளிமாநிலங்களிலிருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி மக்கள் ஏமாறுகின்றனர். தமிழகத்திலேயே இந்த நிலை என்றால் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு எந்த தடையும் இல்லாத மாநிலங்களில் எப்படியெல்லாம் மக்கள் ஏமாந்திருப்பார்கள். அப்படியொரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரங்கேறியுள்ளது.





புனேவைச்சேர்ந்த 34 வயதான இளைஞர் மார்க்கெட்யார்டு பகுதியில் உள்ள வியாபாரியிடம் கணக்காராக பணிபுரிந்துவருகிறார். இவர் எப்படியாவது அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் லாட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார். சில நாள்களுக்குப்பிறகு அவருக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில், “நீங்கள் 25 லட்ச ரூபாய் லாட்டரியில் வென்றுள்ளதாகத் தெரிவித்ததோடு, நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஒரு நற்சான்றிதழ் ஒன்றையும் அந்த இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதனையெல்லாம் நம்பி எப்படியாவது பணத்தைப்பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுள்ளார். குறிப்பாக உங்களுடைய அக்கவுண்டில் பணத்தினை நாங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றால் அதற்கு சில பார்மாலிட்டிகள் எல்லாம் உள்ளது அதற்கு கொஞ்சம் செலவாகும் எனவும், அக்கவுண்ட் நம்பர் ஒன்றை அனுப்பி இதில் அனுப்பிவிடுங்கள் என்று மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இதனையெல்லாம் நம்பி இந்த இளைஞர், தனது தந்தையின் எப்.டி அதாவது நிலையான வைப்புத்தொகையை வைத்து கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை  கடந்த மே 22 ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை சுமார் 15 அக்கவுண்ட் நம்பர்களுக்கு  அனுப்பியுள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ.46 லட்சம் என தெரியவருகிறது.


ஆனால் பல நாள்கள் ஆகியும் இன்னமும் லாட்டரியில் வென்ற பணம் கிடைக்கப்பெறாத நிலையில், சந்தேகமடைந்த இளைஞர் தனது நண்பருடன் சம்பந்தப்பட்ட லாட்டரி அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது தான் அப்படியொரு கம்பெனி எதுவும் இல்லை என்பதும், தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அவர் அறிந்துள்ளனர்.





இதனையடுத்து புனேவில் உள்ள Bibwewadi காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற  லாட்டரி மோசடி வழக்கினை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 26 லட்ச  ரூபாய் பரிசுத்தொகைக்காக ரூ.46 லட்சத்தை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இனிமேலாவது இப்படி எந்தவொரு கம்பெனியும் நம்பி ஏமாறாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.