தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முருகன் என்ற கட்டை முருகன். இவர் மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான முருகனும் இவரது நண்பரான அழகேசப்புரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல் ராம் என்பவரும் பைக்கில் தாளமுத்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். ஐந்து குழந்தைகளின் தாயான அப்பெண்ணெய் தருவைகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து முருகன் என்ற கட்டை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் அவரை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கோகுல் ராம் சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல் ராம் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பின் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் அனைத்தும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே தாளமுத்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த இன்பராஜ் என்பவரை முருகன் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், முருகன் உள்ளிட்ட இருவரை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் ஆய்வாளர் வனிதா அடங்கிய போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முருகன் என்ற கட்டை முருகன் மற்றும் கோகுல் ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர், விசாரணைக்கு பிறகு இருவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி உள்ள முருகன் போலீசார் பிடியிலிருந்து பைக்கில் தப்பி செல்லும்போது தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 205 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.