மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 32 வயதாகும் வீரமணி பெருங்குடியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக் ஷோரூமில் பணியாற்றி வந்தார். இந்த ஷோரூமில் மாதத்தவணையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது. இவ்வாறு மாதத்தவணையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு,  பான் கார்டு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். வாடிக்கையாளர்கள் தங்களது ஒரிஜினல் ப்ரூஃப்களை பைனான்ஸ் கம்பெனியிடம் கொடுத்ததும், அவர்கள் கடைக்கு செலுத்த வேண்டிய தொகையை பைனான்ஸ் கம்பெனி செலுத்தும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி சிறிது சிறிதாக வட்டியுடன் பைனான்ஸ் கம்பெனிக்கு திருப்பி செலுத்துவார்கள். அதற்காக தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.



இந்நிலையில், ஷோரூம் ஊழியர் வீரமணி, தனது நண்பர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த 37 வயதாகும் ஸ்டீபன் என்பவருடன் சேர்ந்து, ஷோரூமில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆவணங்களை திருடி, அதில் வேறு ஒருவர் புகைப்படத்தை ஒட்டி, அதே ஷோரூமில் விலை உயர்ந்த செல்போன், எல்இடி டிவி, வாஷிங் மிஷின் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அடையாள அட்டையின் எண்கள் ஒரே போல இருப்பதை அறிந்த பைனான்ஸ்  நிறுவன உதவி மேலாளர் சீனிவாசன், நேற்று முன்தினம் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் கொடுத்ததை அடுத்து கடையில் சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர் முதலாளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை அறிந்தனர். அப்படியென்றால் கடையில் உள்ளவர்களோ இல்லை வெளி நபர்களோ இந்த வேலையை செய்திருக்க கூடும் என்ற வகையில் விசாரணையை தொடர்ந்த போலீசார் கடையில் வேலை செய்யும் ஊழியரான வீரமணியிடம் இருந்து ஆதாரங்களை கைப்பற்றினர். அவரது வாக்குமூலத்தின் படி அவரது நன்பர் ஸ்டீபன் என்பவரையும் விசாரித்தனர். 



அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ஷோரூம் ஊழியர் வீரமணி மற்றும் ஸ்டீபனை நேற்று கைது செய்தனர். விசாரணையில், வீரமணி தனது நண்பர் ஸ்டீபனுடன் சேர்ந்து, வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி அதன்மூலம் இதுவரை ரூ.1.53 மதிப்புள்ள செல்போன், எல்இடி டிவி, வாஷிங் மிஷின் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது. பின்னர், அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அது மட்டுமின்றி இதுபோன்ற மோசடிகள் பல கடைகளில் நடைபெறுவதாகவும் கடை முதலாளிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வலியுறுத்தினார்கள்.