நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3443-ஆக இருந்தது. மேலும் கடந்த மூன்று நாட்களாக கொரோனா உயிரிழப்புகள் 3 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

Continues below advertisement


இந்நிலையில் டெல்லியின் துவாரகா பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீயணைப்பான் விற்பனை செய்த இருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கீதா அரோரா என்பவர் டெல்லி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவரது உறவினர்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைக்காக தவித்துள்ளார். அந்த சமயத்தில் கீதா தனது உறவினரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் டெல்லியில் மருத்துவமனையில் இடம் கிடைக்காத காரணத்தால், அவர் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடிவெடுத்துள்ளார். 




அதன்படி அசுதோஷ் மற்றும் ஆயுஷ் என்ற இருவரை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை குறித்து கேட்டுள்ளார். அவர்களும் 10,000 ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீதாவிடம் அவர்கள் தீயணைப்பானை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இவர்கள் ஏமாற்றியதை அறிந்தவுடன் கீதா டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய டெல்லி காவல்துறையினர் அசுதோஷ் மற்றும் ஆயுஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு தீயணைப்பானையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் சூழலில் உதவுகிறேன் எனக்கூறி ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.