உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் வீட்டின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதல்கட்ட போலீஸ் விசாரணையில் இரண்டு குழந்தைகளுமே மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தெரிகிறது. சடலங்களைக் கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தைச் சேர்தவரின் பிள்ளைகள் சலீம் (5), அயான் (5). நேற்றிரவு இந்த இரண்டு குழந்தைகளும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் வீட்டில் இருந்தவர்கள் குழந்தைகளைத் தேடியுள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். குழந்தைகள் எப்போதும் விளையாடும் இடங்களில் எல்லாம் தேடியுள்ளனர். மசூதியில் உள்ள ஒலிப் பெருக்கி மூலமாகவும் அறிவித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சம்பவம் நடந்த பகுதி சஹஸ்வான் கோட்வாலி காவல் சரகத்துக்கு உட்பட்ட பவானிபூர் கேரு கிராமம். உடனே கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும் குழந்தைகளை தீவிரமாக தேடினர்.
காரில் சடலமாக..
இந்நிலையில் குழந்தைகள் சலீம், அயான் வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்து சஹஸ்வான் கோட்வாலி காவல் ஆய்வாளர் சஞ்சீவ் சுக்லா பேசினார். அப்போது அவர், எங்களுக்கு புகார் வந்த நிமிடத்திலேயே நாங்கள் பிள்ளையைத் தேடச் சென்றுவிட்டோம். குழந்தைகளின் வீடு அமைந்திருந்த பகுதியில் விசாரணையை ஆரம்பித்தோம். அப்போது தான் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரை பார்த்தோம். அந்தக் காரின் ஜன்னல்களை மறைத்து திரை சீலை போடப்பட்டிருந்தது. அந்த கார் பற்றி விசாரித்தோம். அப்போது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காரின் அருகே சென்றார். உள்ளே குழந்தையின் கை தெரிவதை பார்த்துவிட்டு அலறினார். எங்கள் கண் முன்னால் தான் கார் திறக்கப்பட்டது. குழந்தைகள் இருவரும் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், குழந்தைகள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் காருக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் உடற்கூறாய்வு வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும். குழந்தைகளை யாரேனும் காருக்குள் தள்ளி பூட்டிவைத்து கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகிறோம் என்று கூறினார்.
அஜாக்கிரதை கூடாது:
ஷாப்பிங் செய்ய போகும் பெற்றோர் குழந்தைகள் அடம் பிடிப்பார்கள் என்று காருக்குள் விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஊர் குளம், குட்டையில் விளையாடப் போகும் பிள்ளைகளைக் கண்டித்து கூட ஒரு பெரியவராவது செல்லாது தனித்தே அனுப்பும் பெற்றோரையும் பார்த்திருப்போம். காஸ்ட்லியான பொம்மைகளைக் கொடுக்கிறோம் என்று கைக்குழந்தையிடம் எதையாவது கொடுத்து அது சிறு பாகங்களை முழுங்கிய பின்னர் மருத்துவமனைக்கு ஓடும் பெற்றோரையும் பார்த்திருப்போம். குழந்தைகளை வளர்ப்பதும் ஒரு கலை தான். பொறுப்புடன் கூடிய பெற்றோராக இருப்பது மிகப் பெரிய கடமை. அதனால் குழந்தை வளர்ப்பில் அஜாக்கிரதை கூடாது.