புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிக் கிளையில் அடகு வைத்த நகைகளுக்கு மாற்றாக கவரிங் நகைகளை மாற்றி மோசடி செய்த இரு காசாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்ட 400 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நகர கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் 1,500க்கும் மேற்பட்டோர் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
கடந்த 18ம் தேதி ஆறுமுகம் என்பவர் தான் அடகு வைத்த நகைகளை மீட்க சென்றார். லாக்கரில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது கடன் அட்டைக்கான நகை பையில் அவரது நகைக்கு பதிலாக வேறு நகைகள் இருந்துள்ளன. அதுவும் போலி நகையாக இருந்ததால் மேலாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கூட்டுறவு தலைமை வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை வங்கியில் அடமானம் வைத்த நகைகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். இதில் நகை மோசடி செய்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வங்கியின் தலைமை காசாளரான கணேசன், உதவி காசாளாரான விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இது பற்றி காவல் ஆய்வாளர் வெங்கடா ஜலபதி இன்று கூறுகையில், வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை லாக்கரில் வைத்து பாதுகாப்பது வழக்கம். லாக்கரை திறக்க காசாளர்கள் செல்லும்போது வங்கி மேலாளர் மேகநாதன் உடன் செல்வார். அவர் விடுமுறை எடுத்தால் உதவி மேலாளர் பிரதீபாவிடம் வங்கி லாக்கர் சாவிகள் இருக்கும். பிரதீபா பொறுப்பில் இருக்கும் போது லாக்கர் திறக்கும் போது காசாளரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் லாக்கர் சாவிகளை தருவது வழக்கம்.
அதை பயன்படுத்திக் கொண்ட கணேசன், விஜயகுமார் இருவரும் வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து விடுவார்கள். தங்க நகைகளை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியில் சென்று வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். வங்கியில் அடமானம் வைத்தோர் தங்க நகைகளை திருப்ப வரும்போது குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறி வெளியில் இருக்கும் நகைகளை எடுத்து வந்து லாக்கரில் வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அண்மையில் ஆறுமுகம் என்பவர் நகைகளை அவசரமாக திருப்ப வந்த போது காசாளர்கள் மாட்டியுள்ளனர். லாக்கரில் இருந்த அடமான நகைகளில் 80 பைகளில் இருந்த 400 பவுன் நகைகளை வெளியில் அடமானம் வைத்திருந்தனர். அந்த நகைகள் அனைத்தும் மீட்டுள்ளோம். இதன் மதிப்பு ரூ.1.19 கோடி. நகைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வங்கியில் ஒப்படைப்போம். பொதுமக்கள் நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இதனால் நகை அடகு வைத்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மேலும் இருவர் மீதும் 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்