கரூர் அருகே லாலாபேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 41.5 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதிகளில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி காரினை நிறுத்தி சோதனையிட்டபோது காரினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். காரில் இருந்த 30 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள், 5.940 கிலோகிராம் கூல் லிப், 5.500 கிலோ கிராம் எடையுள்ள விமல் பான் மசாலா பாக்கெட்டுகள் ஆகியவற்றினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தியதாக சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாரதிராஜா மற்றும் ஆம்னி காரினை ஓட்டி வந்த மேலகுட்டப்பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
விஷம் வைத்துக் கொல்லப்படும் மயில்கள் - ஆர்வலர்கள் வேதனை.
வேலாயுதம்பாளையம் பகுதியில் தேசிய பறவையான மயில்களை விஷம் வைத்து கொள்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தவிட்டுப்பாளையம் அருகே பறந்து சென்ற இரண்டு மயில்கள் திடீரென்று கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன. இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளில் சிலர் மயில்களுக்கு மருந்து வைத்து கொன்று விடுவதாக கூறப்படுகிறது. எனவே மயில்களிடம் இருந்து வேளாண் பெயர்களை காக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் எடுத்துரைக்க வேண்டும். மேலும் மயில்களுக்கு விஷம் வைப்பதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி மயில்களுக்கு விஷம் வைப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.