பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது கோவிலின் பின் புரத்தில் சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சற்றி 14 கிலோமிட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வெளிமாவட்டம் , வெளிமாநிலம் போன்ற இடங்களில் இருந்து கிரிவலம் சுற்ற வருகை தருகின்றனர். இந்நிலையில் கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. மேலும் பல்வேறு ஆசிரமங்களும் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கிரிவலம் செல்வார்கள். கிரிவலப்பாதையில் தற்போது நூற்றுக்கணக்கான சாமியார்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் அருகில் மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சாமியார் போன்று சித்தரித்து கொண்டு பக்தர்களிடம் பேசி வருவதாகவும், இரவு நேரங்களில் சிறுவனை வைத்து அவர் யாகம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வீடியோவும் இணையதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேற்றும் முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, அந்த இடத்தில் யாகம் போன்றவை நடத்த கூடாது என்று கூறி உடனே இடத்தை காலி செய்ய உத்தரவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வீடியோ பதிவில் வந்த சிறுவன் யார், அந்தப் பெண்ணின் மகனா என குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாகம் செய்த சிறுவன் யார், எங்கிருந்து வந்தார், என்ன ஆனார் என்பது குறித்த விபரம் தெரியாத நிலையில், வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்ததா என்றும் போலீசார் விசாரணை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. புகார்கள் வராத நிலையில், தற்போது வீடியோ விஸ்வரூபம் எடுத்திருப்பதால், இது தொடர்பாக பெண் சாமியாரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இங்கு வந்து தங்குவதாகவும் அடிக்கடி புகார்கள் வருகிறது. அதுமட்டும்மின்றி இங்குள்ள சாமியார்கள் சாராயம், மது பாட்டில்கள் வாங்கி குடிப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களும் சென்றவாரம் வைரலாக பரவி வந்தன.
கிரிவலப்பாதையில் பல வருடங்களாக தங்கியுள்ள சாமியார்களை வரன்முறை படுத்த அவர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க மாவட்ட காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை பாதியில் கைவிடப்பட்டது.
எனவே கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களை வரன்முறைப்படுத்த மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அங்கு வசிக்கும் சாமியார்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.