திருவண்ணாமலை மாவட்டம்  கண்ணமங்கலம் மேல்நகர் கீழ்நகர் பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சுதாகர் என்பவர் மீது கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட மணல் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி கீழ்நகர் கிராமத்தில் உள்ள நாகநதி ஆற்றில் சுதாகர் டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட போது கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் அவரை பிடிக்க சென்றனர். அப்பொழுது சுதாகர் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
 டிராக்டரை பறிமுதல் செய்த கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதாகரை தீவிரமாக தேடி வந்தனர்.



மேலும் தலைமறைவாக இருந்த சுதாகரை பிடிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து சுதாகரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று தனிப்படை போலீசார் சுதாகரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுதாகரிடம்  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மணல் மாஃபியா என கூறப்படும்  சுதாகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு   தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் போலீசார் 23 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார்.


 




இது பற்றி விசாரித்த போது  சுதாகர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில டிவி சேனல்களில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் நான் மணல் வியாபாரத்தை கைவிட்டுவிட்டேன். இருந்தாலும் என்னை மணல் கடத்தும்படி கண்ணமங்கலம் காவல் துறையினர் கட்டாயப்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் பணம் எண்ணிடம் இருந்து பெற்றார்கள். சத்திய மூர்த்தி என்பவர் கூறியதன் பேரில் தனிப்பிரிவு போலிஸ் ராஜ்குமார் தான் இந்த ஏற்பாட்டை செய்தார். (ஆஸ்பத்திரியில் இருந்துக் கொண்டே இந்த வேலையை செய்தார்.)
பின்னர் இரண்டு நாள்கள் கழித்து என் வண்டியை ஆய்வாளர் சசிக்குமார் பறிமுதல் செய்யப்போகிறார் என்று ஒரு காவலர் மூலமாக எனக்கு தகவல் அளித்தார்.
அவர் சொன்னபடியே என் வண்டியை ஆய்வாளர் பறிமுதல் செய்துவிட்டார். அப்போது போலீசாரிடம் இரண்டு நாளைக்கு முன்னர் தானே ஒருலட்சம் கொடுத்தேன் என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் பொதுமக்களிடம் இருந்து  புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் கொடுத்தால் வண்டியை விட்டு விடுவதாக காவல்துறையினர் சொன்னார்கள். மொத்தம் 23 வண்டியை மணல் அள்ளுகின்றனர் . ஒரு வண்டிக்கு மாதம் 1 லட்சம் வீதம், மொத்தம் 23 லட்சம் மாதம் வசூலாகிறது.நான் சும்மா அமைதியாக இருந்தேன் என்னை மணல் கடத்த தூண்டிவிட்டதோடு, என்னிடம் மேலும் பணம் கேட்டால் நான் எங்கே போவது என்றெல்லாம் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.



அதாவது கண்ணமங்கலம் காவல்துறையினர் லஞ்ச விவகாரங்களை வெளிப்படையாக போட்டுடைத்தார் மேல்நகர் சுதாகர். இதன் அடிப்படையில் தான்  காவல்துறையினர் கைது செய்துள்ளார்களா என்கிற சந்தேகமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.