இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலம் நிர்மல் நகராட்சியின் துணை தலைவர் ஷேக் சஜித் கான். இவர் தெலங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 26ஆம் தேதி குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் நிர்மல் பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.




அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமிக்கு உடம்பு சரியில்லாமல் போனது தெரியவந்தது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்களும் தெரியவந்தது. அதன்படி 15 வயது சிறுமி நிர்மல் பகுதியில் ஒரு வீட்டில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஓருவர் இவரை கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் கூறி ஹைதராபாத்திற்கு உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த இந்த சஜித் கான் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 


அவர்கள் சில நாட்கள் அங்கு விடுதியில் தங்கிவிட்டு மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அந்தச் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகியுள்ளது. அப்போது அச்சிறுமி தனக்கு நடந்தவற்றை வெளியே கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் உடந்தையாக இருந்த டிரைவர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டம் ஆகிய இரண்டின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சஜித் கானை பிடிக்க காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்துள்ளது. அவர்கள் தீவிரமாக சஜித் கானை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண