திருச்சி அருகே பயங்கரம்... தம்பி கம்பியால் அடித்து கொன்ற அண்ணன் கைது
திருச்சியை அடுத்த நம்பர்-1 டோல்கேட் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கம்பியால் அடித்துக்கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை அடுத்த நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி மாரியாயி. இந்த தம்பதியின் மகன்கள் முத்தையன் (வயது 34), கோபி (27). இதில் கோபி அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலையை செய்து வந்தார். முத்தையன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜயன் இறந்தார். இதனால் மகன்கள் இருவரும் தாயுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் சகோதரர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் அவர்களுக்கு இடையே கைகலப்பும் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் முத்தையனுக்கும், கோபிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்று கோபி தூங்கியுள்ளார். மறுநாள் காலை மாரியாயி துவைத்த துணிகளை வெயிலில் காய வைப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோபி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாரியாயி சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். தொடர்ந்து இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Just In




இதனை தொடர்ந்து கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அண்ணன் முத்தையன் தம்பி கோபியை கடப்பாரை கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த கடப்பாரை கம்பியை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து கோபியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்