திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார். வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெயபாரதி தனது மகனுடன் பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீடு கடந்த சில தினங்களாக பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தாயும், மகனும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.




பின்னர் அவர்களின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில், ”எங்கள் முடிவிற்கு யாரும் காரணமில்லை. என் குடும்ப சூழ்நிலை. எனது உடல்நிலை, எனது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன். எனது உடலை எனது தகப்பனாரிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்த பிறகு கூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை. 8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. என் மகனுக்கும் அவர் தந்தையாகவோ, எனக்கு கணவராகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம் நீ போய் உங்கப்பாவிடம் இரு என சொன்னேன். ஆனால் அவன் கேட்காமல் என் கூடவே விஷமருந்தி விட்டார். இந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசிகூட எனது கணவருக்கோ, தகப்பனார் வீட்டிற்கோ போகக்கூடாது” என எழுதி வைத்துளார். தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.