திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவில், நாகப்பன் மனைவி கல்யாணி என்பவர் அவரது கணவருடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 03 ஆம் தேதி காலை கல்யாணியின் கணவர் நாகப்பன் முத்தன் தெருவில் உள்ள வள்ளியப்பா எலக்ட்ரிக்ஸ் என்ற தனது கடைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.


அப்போது கல்யாணியின் மகன் ராமநாதன் என்பவர் அன்று மதியம் மதிய உணவு வாங்க வந்தபோது வீட்டின் சமையலறையில் கல்யாணியின் உடலில் எவ்வித காயங்களுமின்றி இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட உடன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


விரைந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரது கழுத்தில் இருந்த தாலி செயின் -09 பவுன், காதில் ஒரு ஜோடி வைரதோடு-01 பவுன், வளையல் 08 பவுன், மோதிரம் 1/2 பவுன் நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் ரூ. 30,000 ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.


மேலும் தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மகன் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்தனர்.




நகை - பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்தோம் - பரபரப்பு வாக்குமூலம்


இந்த சந்தேக மரணம் வழக்கு தொடர்பாக, மணப்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து  தலைமையில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் விவேக் கண்ணன் மற்றும் மணப்பாறை காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு, இறந்துபோன கல்யாணி என்பவரின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடும் கேசவன் என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து சென்றதாக தகவல் கிடைத்தது.


இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை கூர்ந்து ஆய்வு செய்தனர். கேசவன் என்பவர் வந்து சென்றது உண்மையென தெரியவந்ததால், தனிப்படையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


தீவிர விசாணையில், கேசவன், தனது நண்பர்களான ராமசந்திரன், ராமன், வெங்கடேஷ் ஆகியோர்களுடன் சேர்ந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடிக்கும் நோக்கில்  கல்யாணியின் வாய் மற்றும் மூக்கினை கையால் பொத்தி கொலை செய்து உள்ளனர். பின்பு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தாக கேசவன் வாக்குமூலம் கொடுத்தார். ஆகையால்  வழக்கானது ஆதாய கொலை குற்ற சட்ட பிரிவாக மாற்றம் செய்யபட்டு, குற்றவாளி கேசவன் என்பவரை  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கபட்டார்.


மேலும், கொலையுண்டு இறந்துபோன கல்யாணியின் வழக்கில் தொடர்புடைய ராமசந்திரன், வெங்கடேஷ், ராமன் மற்றும் சிலரை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.