திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பட்டப்பகலில் கடந்த ஒரு வாரத்தில் திருச்சி மாநகரில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஆகையால் பொதுமக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கபட்டது. இந்நிலையில் நேற்று திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி பகுதியில் பரஞ்சோதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 45). தொழிலதிபரான இவர் திருச்சியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் பிளாஸ்டிக் குழாய் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ணகுமார் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி தீபா(40) மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். நேற்று அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் வளையல்கள் உள்பட 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை:
மேலும் இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் இல்லாததை அறிந்து, நேற்று முன்தினம் இரவு கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் வீட்டை மோப்பம் பிடித்தபடி சென்று ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பொதுமகக்ள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகம்படும்படி யாராவது உங்கள் பகுதிகளில் சுற்றி திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்