பில்லி சூனியம் செய்ததாகச் சந்தேகப்பட்டதால் ஒடிசாவில் ஒரு பெண் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். நெஞ்சைப் பதைபதைக்கவைக்கும் இந்தச் சம்பவம் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.


ஒடிசா மாநிலத்தில் மயூர் பஞ்ச் மாவட்டத்தின் பங்கிரிபோஷி காவல் சரகத்துக்கு உட்பட்டதூ புருனாபானி கிராமம். பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் கிராமம் இது. இங்கேதான் அந்தக் கொலை சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தலைவெட்டப்பட்ட உடல்கூட்டையும் மண்டை ஓட்டையும் கைப்பற்றிய போலீசார் அது 55 வயது குனி ஜெராயினுடையது என கடந்த 24 ஜூலை அன்று உறுதி செய்துள்ளனர் இதனை பொறுப்பு இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் பரிடா குறிப்பிட்டுள்ளார். இது குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஒப்படைக்கப்பட்ட பின்னர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 


குற்றம்சாட்டபட்டுள்ள ஜமீரா சிங்கின் மகன் அண்மையில் இறந்துபோனார். தன் மகன் இறப்புக்கு ஜெராயின் பில்லி சூனியம்தான் காரணம் என நினைத்த ஜமீரா ஜெராயின் உடலை வெட்டி அருகே உள்ள கிராமத்தின் ஒரு இடத்தில் கடந்த 9 ஜூலை அன்று வீசியுள்ளார். ஜெராய் காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸ் கொலை ஆயுதத்தை கைப்பற்றியது. அதில் இருந்த தடயங்களை வைத்து கொலையாளிக் கண்டுபிடித்துத் தற்போது கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.