விழுப்புரம் : மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், தனியார் கல்லூரிப் பேராசிரியர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Continues below advertisement

கிழக்கு கடற்கரை சாலையில் கோர விபத்து - இருவர் உயிரிழப்பு

சென்னை, வண்டலூரைச் சேர்ந்த பிரேமன் மகன் ஸ்ரீ சூரியன் (27), செய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார், நேற்று மாலை அவர் தனது நண்பரை புதுச்சேரியில் விட்டுவிட்டு, இரவு சுமார் 10 மணியளவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் பைக்கில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகத் தனது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அதே சமயம், மரக்காணம் அருகே கூனிமேடு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (26) மற்றும் அரவிந்த் (32) ஆகிய இருவரும் ஒரே ஸ்கூட்டரில் புதுவையில் இருந்து கூனிமேட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மரக்காணம் அருகே ரங்கநாதபுரம் என்ற இடத்தில், கிருஷ்ணன் ஓட்டி வந்த ஸ்கூட்டரை எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே திருப்பியுள்ளார். அப்போது, சூர்யா ஓட்டி வந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் பைக், கிருஷ்ணனின் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.

Continues below advertisement

இந்த விபத்தில் ஸ்ரீ சூரியன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், கிருஷ்ணன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் மீட்டனர். பேராசிரியர் ஸ்ரீ சூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கனக செட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கிருஷ்ணன் மற்றும் அரவிந்த் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு கிருஷ்ணன் பரிதாபமாக உயஉயிரிழந்தார், அரவிந்த் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் கோர விபத்து குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மரக்காணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.