பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் ஆடி கார் கட்டுப்பாடு இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றை இடித்து நின்றதில், 20 முதல் 30 வயது வரை உட்பட்ட 7 பேர் பலியாகினர். திமுகவைச் சேர்ந்தவரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் இந்த விபத்தில் பலியாகினார். இஷிடா, தனுஷ், அக்ஷய் கோயல், ரோஹித் என்ற மற்ற பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
சாலைப் பாதுகாப்பு இணை காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா இந்த விபத்து குறித்து அளித்த பேட்டியில், ”7 பேர் பயணித்த சொகுசு ஆடி கார் ஒன்று, வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து நள்ளிரவு சுமார் 1.45 மணிக்கு அங்கிருந்த கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முழுவதும் உடைந்து நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த யாருமே சீட் பெல்ட் அணியாததால், அதில் இருந்து ஏர் பேக் எதுவும் திறக்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர் விபத்து நடந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த 15 நிமிடத்தில் சாலைப் பாதுகாப்பு காவல்துறையினர் கூடி, உயிருடன் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார்.
விபத்திற்குள்ளான காரில் இருந்த வசதிகள் என்ன?
5 சீட்களைக் கொண்டுள்ள Audi Q3 35 TDI Quattro கார் சுமார் 40 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்டது. இதில் 4 ஏர் பேக் வசதி உண்டு. எனினும், காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால், காரைப் பொறுத்த வரை, யாரும் பயணிக்கவில்லை என்று புரிந்துகொள்ளப்பட்டு, விபத்து நேர்ந்தால் ஏர் பேக் எதுவும் திறக்காது. சீட் பெல்ட் போடப்பட்டிருந்தால், விபத்து நேரும் போது, ஏர் பேக் திறந்து காரின் மற்ற பகுதிகளின் மேல் பயணிகள் மோதாமல் பாதுகாக்கும். இதன் மூலம் பயணிகள் பாதுகாப்புடன் விபத்தில் இருந்து உயிருடன் தப்பிக்க முடியும். மேலும் 4 பேர் பயணிக்க வேண்டிய வாகனத்தில் 6 பேர் பயணித்திருப்பதும் இந்த விபத்து நேர்வதற்குக் காரணமாக இருந்துள்ளன. கவனமின்றி வாகனத்தை இயக்கியதால், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுப் பாதையில் கவனமற்று பயணித்ததற்காக 279வது சட்டப்பிரிவு, கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் 304வது சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ”முதல் கட்ட விசாரணையின்படி, இந்த விபத்தின் காரணம் அதீத வேகமும், கவனக்குறைவுடன் வாகனத்தை இயக்கியதும் ஆகும். வாகனத்தை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்பது உடல் கூராய்வுக்குப் பிறகு தெரிய வரும்” என்று காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா தெரிவித்துள்ளார்.
Car loan Information:
Calculate Car Loan EMI