திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். தொழிலதிபரான இவர் வலங்கைமான் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மகன் பெரியண்ணா கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி அக்ரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 

இந்தநிலையில் சாக்கோட்டையில் நடைபெற்ற பெரியண்ணாவின் நண்பன் வீட்டு திருமண நிகழ்விற்கு பெரியண்ணா தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு கல்யாண மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு மது விருந்து வைப்பதற்காக 5000 ரூபாயை நெடுமாறன் என்பவரிடம் கொடுத்து வரும்படி பெரியண்ணாவிடம் கொடுத்துள்ளார். பணத்தை எடுத்துச் சென்று நெடுமாறனிடம் பெரியண்ணா கொடுத்த போது அவருடன் இருந்த மூன்று நபர்கள் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

 

மேலும் கடத்தல் கும்பல் பெரியண்ணாவின் போனிலிருந்து அவரை தந்தை விஜயராகவனுக்கு தொடர்பு கொண்டு பத்து லட்சம் பணம் தரவில்லை என்றால் உங்களது மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதைக் கேட்ட விஜயராகவன் கடத்தல் கும்பலுக்கு அஞ்சாமல் நான் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஏதாவது ஒரு பிள்ளை என்னை பார்த்துக் கொள்ளும் அதனால் எனது மகனைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நீங்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். நான் காவல்துறையிடம் புகார் அளித்து என் மகனை மீட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.




விஜயராகவனின் இந்த பதிலால் விரக்தி அடைந்த கடத்தல் கும்பல் பெரியண்ணாவை கடத்திய இடத்திலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். பெரியண்ணாவை விட்டுவிட்டு வலங்கைமானுக்கு திரும்பிய கடத்தல் கும்பல் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த சூரிய ராகவன் வயது 26 என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 1500 ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

 

இதுகுறித்து சூரியராகவன் வலங்கைமான் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதேபோன்று தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக விஜயராகவன் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் 1500 ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் துறையினர் வலங்கைமானை சேர்ந்த நிவாஸ் வயது 36 சந்தோஷ் குமார் வயது 22 விருப்பாச்சிப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் வயது 23 ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் வலங்கைமான் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் விஜயராகவன் மகன் கடத்தலில் ஈடுபட்டதும் இந்த கும்பல் தான் என்பது தெரிய வந்தது.

 

இந்த கடத்தலின் முக்கிய நபரான விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் மட்டும் தலைமுறைவாக உள்ளதும் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள நெடுமாறனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வலங்கைமான் பகுதியில் தொழில் அதிபர் மகனை கடத்தி 10 லட்சம் பணப் பேரம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 10 லட்சம் கேட்டு தொழிலதிபதிர் மகனை கடத்திய கும்பல் 1500 ரூபாய் வழிப்பறி செய்து காவல்துறையில் சிக்கிய விவகாரம் பொது மக்களிடம்  நகைப்பையும் ஏற்படுத்துகிறது.