திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்த சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதேப் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் அஷ்டலட்சுமி வயது 20 என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சுபாஷ் அஷ்டலட்சுமியை அழைத்துச் சென்று வெளியூரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சோத்தக்குடி வந்த சுபாஷ் அஷ்டலட்சுமி தம்பதியினர் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுபாஷ் தினமும் குடித்துவிட்டு வந்து அஷ்டலட்சுமியிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு சுபாஷ் எலி பேஸ்ட் உட் கொண்டு தற்கொலைக்கு முயன்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நான்கு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அஷ்டலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து குழந்தையின் அழுக் குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் அஷ்டலட்சுமியை கூப்பிட்டு பார்த்து கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காத நிலையில் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அஷ்டலட்சுமி சுவற்றின் லாப்டில் தூக்கு போட்ட நிலையில் இருந்து உள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தினர் நன்னிலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அஷ்ட லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் வேலைக்கு சென்று இருந்த சுபாஷ் தகவல் அறிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் அருகில் உள்ள பருத்திக் கொள்ளைக்கு சென்ற சுபாஷ் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடலையும் காவல்துறையினர் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.