முத்துப்பேட்டை அருகே சிகிச்சை பெற்ற பெண் இறந்து விட்டதாக பொய் கூறி மருத்துவரின் தந்தையிடம் நூதன முறையில் 2.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். 


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைதெரு செருபனையூர் சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் அப்துல் காதர். இவரின் மகன் டாக்டர் இம்ரான்கான் என்பவர் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வருகிறார். இந்தநிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் இறந்து விட்டதாக வாலிபர் இருவர் பொய் கூறி மருத்துவரிடம் நூதன முறையில் 2.50 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர் அப்துல் காதர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: கடந்த 29ம் தேதி முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரி என்ற பெண் இந்த மருத்துவமனைக்கு வந்து காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவம் பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் 30ம் தேதி மருத்துவரின் தந்தை அப்துல் காதருக்கு செல்போனில் தொடர்புக்கொண்டு பேசிய ஒருவர் நேற்று அங்குவந்து மருத்துவம் பார்த்த பால சுந்தரிக்கு நீங்க தவறாக கொடுத்த சிகிச்சையால் இறந்துவிட்டார்.




உங்களை சும்மா விடமாட்டோம் என்று மிரட்டியதுடன் உங்களிடம் நேரடியாக பேசவேண்டும் என்று கூறியுள்ளார். சரி வாருங்கள் என்று அப்துல் காதர் அழைத்துள்ளார். அங்குவந்த சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் வீரசேகரன்(34), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்ராஜன் மகன் முகேஷ் குமார்(26) ஆகியோர் மருத்துவரிடம் நேரடியாக மிரட்டி 5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்படி தராவிட்டால் பிரேதத்தை எடுக்க மாட்டோம் உறவினர்களை அழைத்து வந்து பிரச்னை செய்வோம் என்று கூறியுள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் காதர்  2 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய இருவரும் இறுதி சடங்கு செய்துவிட்டு வந்து மீதி தொகை வாங்கி கொள்கிறோம் என்று கூறி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் 1ந்தேதி மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு வந்து மீதி மூன்று லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி 50ஆயிரம் அவரிடம் பெற்று சென்றவர்கள் இரவு மீதி பணம் தர வேண்டும் இல்லையேல் கிராமத்தையே திரட்டி வந்துவிடுவேன் என்று கூறி சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அப்துல் காதர் தில்லைவிளாகத்தில் உள்ள நண்பரை தொடர்புக்கொண்டு இதுகுறித்து கூறி விசாரித்தபோது பாலசுந்தரி இறந்து போகவில்லை நல்ல நிலையில்தான் இருக்கிறார் என்று தெரிய வந்தது. 




இதனையடுத்து அப்துல் காதர் மற்றும் அவரின் உறவினர்கள் மிரட்டி பணம் வாங்கி சென்ற இருவரின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது வீரசேகரனும், முகேஷ் குமாரும் அதே தோரணையில் வந்து மீதி தொகையை தாருங்கள் என்று கேட்டுள்ளனர் அப்போது இருவரையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் பாலசுந்தரிக்கும் தொடர்பு இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது அதனை எடுத்து மூன்று பேர் மீதும் ஏமாற்றுதல் சதி செய்தல் அத்துமீறி உள்ளே நுழைதல் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் வீரசேகரன் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலசுந்தரியை காவல்துறையினர் தேடி வருகிறனர். இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள முகேஷ் குமார் பாஜக கோட்டூர் ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் மருத்துவர் தந்தையிடம் சிகிச்சை பெற்ற பெண் இறந்து விட்டதாக பொய் கூறி மருத்துவரின் தந்தையிடம் நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.