பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் எரிந்து டிசம்பர் 16ஆம் தேதி மலை மீது இருந்து மகா தீப கொப்பரை கோவில் ஊழியர்களால் சுமந்தவாறு அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மையானது தயார் செய்யப்பட்டது.
ஆருத்ரா தரிசனமான நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தீப மையானது ஆருத்ரா தரிசன தினமான இன்று நடராஜ பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்ட பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில் அதற்குள்ளாகவே பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் அண்ணாமலையார் கோவில் பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கி தீப மை வேண்டுமென்றால் இன்பாக்ஸில் தகவல் தெரிவிக்கவும் என தீப மை புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து கோவில் அலுவலகரிகளின் வட்டாரத்தில் தெரிவிக்கையில்; சமூக வலைதளத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், மர்ம நபர்கள் யாரோ பணம் சம்பாதிக்கும் நோக்கில் இதுபோன்று போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளதாகவும் , மேலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அண்ணாமலையாரின் பிரசாதமான தீப மை பக்தர்களுக்கு வேண்டுமென்றால் நேரடியாக கோயிலுக்கு வந்து பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவில் பெயரில் போலியான கணக்கை உருவாக்கி பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள் மீது விசாரணை நடத்திட வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர். அண்ணாமலை கோவிலின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி உள்ள சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.