திருவண்ணாமலை திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் தப்பியோடிய ஐந்து நபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் வயது (41) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது ஆவின் பால் குளிருட்டும் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வழிமடக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகுமார் உடனடியாக அவருடைய இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த ராஜேஷ் எகிறி குதித்து ஆவின் குளிரூட்டும் நிலையத்திற்கு உள்ளே ஓடியுள்ளார்.
உடனடியாக முத்துகுமாரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அந்த அடையாளம் தெரியாத கும்பல் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து முத்துவின் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கு இருந்து இருச்சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த முத்துகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனைப் பார்த்த ராஜேஷ் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர், அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தலைமறைவாகினர். இந்த கொடூர தாக்குதலில் ராஜேஷ் தப்பினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முத்துகுமாரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் உயர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகரை வெட்டிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்த நிலையில் ஐந்து நபர்கள் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதில் திருவண்ணாமலை இரட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து என்பவரை அதே தெருவை சேர்ந்த ஷாம் என்ற இளைஞர் முன் விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றுள்ளார். அவருக்கு துணையாக திருவண்ணாமலை நகரில் உள்ள வேங்கிகால் உள்ளிட்ட பகுதிகளைச் ஜெய்பீம் நகரை சேர்த்த பிரவீன் வயது (21), எழில் நகரைச் சேர்ந்த சோனாச்சலம் என்கிற பாலாஜி வயது (24) அவலூர்பேட்டை சாலை பகுதியை சேர்ந்த அஷ்ரப் வயது (21) மற்றும் ஓம் சக்தி நகரை சேர்த்த அருண் வயது (21) உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.