ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சவுண்ட பள்ளி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன். அவருடைய வளர்ப்பு மகன் ஹரீஷ். இவர் லாரி ஓட்டுநராக உள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பெரிய உனை பகுதியிலிருந்து ரமேஷ் என்பவரின் மகன் மேகநாதன் மற்றும் புலி வேந்தர் ஆகியாருக்கு சொந்தமான வாத்துகளை லாரியில் ஏற்றிச்சென்று பலபகுதிகளில் அவற்றை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக ஹரீஷ் வாத்துகளை லாரியில் லோடு ஏற்றி வந்துள்ளார். அப்போது லாரி கலசப்பாக்கம் அடுத்த கடலடி பகுதியில் எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  லாரியின் உரிமையாளர் மேகநாதன் அபராதம் செலுத்தி விட்டு வாகனத்தையும் ஹரிஷையும் மீட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மேகநாதனும் விஜயகுமாரும் சேர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் செங்கம் அருகே தோக்கவாட்டி காட்டுப்பகுதியில் ஓட்டுநர்  ஹரீஷ் கை, கால்களை கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.




 


ஓட்டுநர் ஹரிஷ் அடித்து கொலை 


அப்போது ஹரீஷ் என்னை விட்டு விடுங்கள் என கதறி அழுதுள்ளார். அதனை இரண்டு பேரும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஹரிஷ் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அவரை கட்டி வைத்திருந்த கயிறுகளை அவிழ்த்து பார்த்த போது ஹரிஷ் இறந்து விட்டது தெரியவந்தது. அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஹரிஷ் உடலை எடுத்துச் சென்று தோக்கவாடி எல்லைக்குட்பட்ட செய்யாறு பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இதனை  பற்றி எதுவும் தெரியாத பாஸ்கரன் வழக்கம் போல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஹரீஷ் தாக்கிய வீடியோவை பாஸ்கரனிடம்  யாரோ ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காட்டியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக விஜயகுமார், மேகநாதன் மற்றும் அவரது தந்தை ரமேஷ் ஆகியோரிடம் சென்று ஹரிஷ் எங்கே உள்ளான் என கேட்டுள்ளார்.




 இருவர் கைது 


அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த ஹரீஷ் தந்தை  உடனடியாக செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் செங்கம் ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விஜயகுமார், மேகநாதன் ஆகிய இரண்டு நபர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் நடந்த சம்பவங்களை ஒப்புக்கொண்ட இரண்டு நபர்களும் ஹரிஷ் புதைக்கப்பட்ட இடத்தை காட்டியுள்ளனர். இதை அடுத்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னணியில் புதைக்கப்பட்ட ஹரீஷ் உடலை மருத்துவர்கள் குழி தோண்டி எடுத்து பிரோத பரிசோதனை செய்தனர். மேலும் இது தொடர்பாக விஜயகுமார், மேகநாதன் ஆகிய காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.