திருவண்ணாமலை நகரத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் வயது (34). இவர் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இந்த தீபாவளி சீட்டில் கவர்ச்சிகரமான திட்டங்களான 2 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, அரை கிலோ இனிப்பு, பட்டாசு பெட்டி, பித்தளை, சில்வர் பாத்திரம் உள்ளிட்டவை வழங்குவதாக கூறியுள்ளார். அப்போது 20 ஏஜெண்டுகள் மூலம் 204 நபர்களிடம் இருந்து நபருக்கு ரூபாய் 600 என்ற முறையில் மாதம் மாதம் சீட்டு பணம் வசூ லிக்கப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 14 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு கார்த்திகேயன் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். அதன் பிறகு பணம் வாங்கி கொடுத்த ஏஜெண்டுகள் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். கார்த்திகேயன் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவு ஆனது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து தீபாவளி சீட்டு கட்டிய நபர்கள் ஏஜெண்டுகளிடம் தீபாவளிக்கு வழங்ககூடிய பொருட்களை கேட்டுள்ளனர். பின்னர் ஏஜெண்டுகள் நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெரிவித்தனர். இருந்த போதிலும் பணம் கட்டியவர்கள் ஏஜெண்டுகளை தொடர்ந்து தொந்தரவு செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஏஜெண்ட் கடந்த 2020 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதில் ஏஜென்ட் மரகதம் என்பவரின் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி பணத்தை எடுத்து சென்று தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூர்த்தி இன்று தீர்ப்பு கூறினார். இதில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகைகளை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூபாய் 13 லட்சத்து 84 ஆயிரம் கார்த்திகேயன் திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பினை வழங்கினார். இதையடுத்து கார்த்திகேயனை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.