திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் மாணிக்கம் வயது (31). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். மாணிக்கத்தின் உறவினரான ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயசுதா வயது (29), இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தபோது பூந்தமல்லியை சேர்ந்த குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது 2 வயது மகன் ஏனோக்ராஜ் வயது (2). குடும்ப தகராறு காரணமாக குணசேகரனை பிரிந்து, ஜெயசுதா குழந்தையுடன் சந்தவாசல் பகுதியில் தனியாக வசித்து வருகிறார் .


கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெயசுதாவை மாணிக்கம் 2வது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் ஜெயசுதா கர்ப்பமாகியுள்ளார். மாணிக்கத்திற்கு தெரியாமல் அவர் கர்ப்பத்தை கலைத்து விட்டாராம்.  மாணிக்கம் வீட்டில் ஏனோக்ராஜ் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணிக்கம், ஜெயசுதாவிடம் யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் வைத்து வளர்க்க வேண்டும்? எனக் கேட்டு வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறும் நடந்து வந்தது. மேலும் கோபத்தில் இருந்து வந்த மாணிக்கம், சிறுவன் ஏனோக்ராஜ் மீது வெந்நீரை எடுத்து ஊற்றுவது, சாதம் வடித்த சுடு கஞ்சியை அவன் மீது ஊற்றுவது, சூடாக இருக்கும் கஞ்சி பாத்திரத்தை அவன் மீது வைப்பது என சூடுவைத்து கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கொடுமைப்படுத்தி வந்ததில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக சிறுவனை கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீடு திரும்பினர்.


 




மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஏனோக்ராஜுக்கு வலி அதிகமாகியது. உடலில் பல இடங்களில் கொப்புளங்கள் உருவாகின. மேலும் சிறுவனை மீண்டும், ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஏனோக்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து ஜெயசுதாவின் 2-வது கணவராக குடும்பம் நடத்தி வந்த மேஸ்திரி மாணிக்கத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.