திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர். கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான பவித்ரா. இவர் ஆர்.கே. பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் 25 வயதான சவுந்தரராஜன். ஆர். கே.பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர்.
சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று காலை கொண்டாபுரம் காலனியில் உள்ள சவுந்தரராஜன் வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே. பேட்டை போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..?
கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி , திருவள்ளூர் மாணவி ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்