திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை முன்பு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் நகர்புற பகுதியில் உள்ள கலைஞர் நகர் மற்றும் டி.எம்.சி. காலனி பகுதிகளைச் சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாடு விடும் விழாவின்போது இருபிரிவினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பெரியார் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகனான கூலித்தொழிலாளி முகிலன் வயது (22), அவரது நண்பர் ராஜேஷ் வயது (18) இவர்கள் இருவரும் சேலம் செல்லும் நெடுஞ்சாலை அருகே பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது டி.எம்.சி. காலனியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, முகிலன், ராஜேஷ் ஆகியோரிடம் தகராறு செய்தனர். அப்போது முகிலனை முதுகு பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து புறநோயாளிகள் பிரிவில் அவருக்கு தையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர்: திருவிழாவில் சண்டை.! அரசு மருத்துவமனையில் இளைஞர் ஓடஓட வெட்டிக்கொலை!
இதனைத்தொடர்ந்து திடீரென்று 4 பேர் அரசு மருத்துவமனைக்கு உள்ளே புகுந்து கத்தியால் முகிலனின் வயிற்று பகுதியில் குத்தி உள்ளனர். உடனே முகிலன் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடும்போது அவரை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக கத்தியால் குத்தியும்,வெட்டியும் உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த நோயாளிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து இருபிரிவினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஒரு பிரிவினர் கலைஞர் நகரில் உள்ள ராஜேஷ் வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் ராஜேஸை அவர்கள் இரும்பு ராடால் தாக்கி உள்ளனர். அவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் சேலம் நெடுஞ்சாலை ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கழிவுநீர் சுத்தம் செய்யும் லாரியின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தலிங்கம், சுரேஷ்பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் டி.எம்.சி காலனி மற்றும் கலைஞர் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து முகிலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அனுப்ப இருந்தனர். அப்போது முகிலனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடலை வேலூருக்கு அனுப்ப மாட்டோம். இங்கேயே பிரேத பரிசோதனை செய்யுங்கள். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுங்கள். அரசு மருத்துவமனையில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராவை காட்டுங்கள் எனக் கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு காவல்துறையினர் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக கொலையாளியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர். 1 மணி நேர சமரசத்திற்கு பிறகு முகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூருக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்