நாட்றம்பள்ளி அருகே ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று குறிக்கோளாக படித்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசு(40). இவருக்கு ஆனந்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகிய நிலையில் நதியா (17) யோகேஷ் (15) பிரவீன் குமார் (11)  என்ற பிள்ளைகள் உள்ளனர்.

 

தமிழரசு தாசிரியப்பனூர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். மேலும் தமிழரசுக்கு முதல் மகள் நதியாவை மிகவும் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவருடைய வீட்டில் இவருக்கென தனி அறையும் உள்ளது. மேலும் நதியா திருப்பத்தூர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

 

இந்த நிலையில்  நதியா தனது பெற்றோரிடம் சேலத்தில் நடக்கும் என்சிசி கேம்பிற்கு நான் செல்ல வேண்டுமென கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பெற்றோர் நீ செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

 

பின்னர் வழக்கம்போல  நதியாவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் சிக்கன் கடைக்கு சென்ற நிலையில் நதியாவின் பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

 

என்சிசி கேம்பிற்கு செல்ல அனுமதி தராததால் மனமுடைந்த நதியா தன்னுடைய அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

 

இந்தச் சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த நாற்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஐபிஎஸ் ஆக வேண்டும் என குறிக்கோளாக தனது மகள் படித்து வந்ததாக பெற்றோர்கள்  கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.

 


உதவி மையம்



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)