திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்த நபரை நண்பரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ்(32). ஓசூரில் கட்டடத் மேஸ்த்திரியாக உள்ளார்.  இவரும் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சரவணன்(35) என்பவரும் நண்பர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதும், ஒன்றாக மது அருந்துவதுமாக இருந்தனர்.

 

இதற்கிடையே காளிதாஸ் மனைவி ரேவதிக்கும், சரவணனுக்கும் இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. இதை அறிந்த காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு பிரிந்தது.



 

இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு வீட்டில் சரவணன் ரேவதி இருவரும் நெருக்கமாக இருந்தனர். 

அப்போது காளிதாஸ் ஓசூரில் இருந்து வருவதை யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிற்கு வந்தார். அப்போது காளிதாஸ் வருவதை அறிந்த சரவணன் உடனே பீரோ பின்புறத்தில் மறைந்தார்.

 

மேலும் ரேவதியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காளிதாஸ் வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்தபோது  பீரோ பின்புறத்தில் சரவணன் இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், கையில்  கிடைத்த ஜல்லி கரண்டி மற்றும் பீர் பாட்டில்களால் சரவணனை சரமாரியாக தாக்கினார்.

 

இதில் படுகாயம் அடைந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அங்கு அவர் இறந்தார்.

 

இதன் காரணமாக குரிசிலாப்பட்டு போலீசார் காளிதாஸை கைது செய்தனர். நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவால் நண்பனே கொலை செய்யும் அளவிற்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‌