ஜோலார்பேட்டையில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிப்பர் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று சந்தைகோடியூர் பகுதியில் திருப்பத்தூர் - வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி போலிசார் சோதனை செய்ததில் தமிழக அரசு அனுமதி இன்றி மணல் கடத்தியது  தெரியவந்தது. 

 

இதனையடுத்து, போலீசார் வாகனத்தில் இருந்த டிப்பர் லாரி டிரைவர் மற்றும் லாரி  உரிமையாளர் ஆகிய இருவரையும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணை செய்ததில் டிப்பர் லாரி டிரைவர்  நாட்றம்பள்ளி அருகே ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த  கோடீஸ்வரன் (20) மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் திருப்பத்தூர் அடுத்த சின்னகுனிச்சி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45)  என்பது தெரியவந்தது. 

 

இதனை தொடர்ந்து, போலீசார் கோடீஸ்வரன் உள்பட 2 பேர் தமிழக அரசு அனுமதி இன்றி மணல் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து, மேலும் இவரிடமிருந்து டிப்பர் லாரி பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.