நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான தூய யோவான் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் வேலை பார்த்து வரும் இரண்டு ஆசிரியர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள் இருவரை மிரட்டி பாலியல் ரீதியிலான சீண்டல்கள் கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர், அதன்படி பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். 


ஆனால் தலைமையாசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு அவர்களை சில நாட்கள் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் அளித்த விசயம் வெளியே வரவே காவல்துறையினர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரும் விசாரணையில் இறங்கினர். மேலும் கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர் ராபர்ட் என்பவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.  மேலும் ஆசிரியர் ராபர்ட் என்பவருக்கு துணை போனதாக மற்றொரு  நிரந்தர ஆசிரியர் நெல்சன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


ஏற்கனவே இப்பள்ளியில் போதை பழக்கம் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்தது. அதோடு சாதிய முரண்பாடுகள் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் இதற்கு முன் அரங்கேறியுள்ளது. எனவே அப்பள்ளி மாணவர்களுக்கு முறையாக கவுன்சில்கள் கொடுத்து அவர்களிடையே ஒற்றுமையுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் மாணவர்களின் குருவான ஆசிரியர்களே மாணவர்களுக்கு ஒழுக்கக்கேடான விசயங்களை சொல்லி கொடுப்பதும் அவர்களை மிரட்டி காரியங்களை சாதிப்பதும் வேதனையான விசயமாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி பெருமை வாய்ந்ததோடு மட்டுமல்லாமல் அரசு உதவி பெற்று அதன் அடிப்படையில் தற்போது  இங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களிடையே இவ்வாறு பாலியல்  சீண்டலில் ஈடுபட்டள்ளது இங்குள்ள பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 


இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டபோது,  புகார்கள் வந்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை ஆகியவை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அறநெறி போதிக்கும் ஆசிரியர்களே மாணவர்களுக்கு ஒழுக்கக்கேடான விசயங்களை கற்றுக் கொடுப்பது வருங்கால மாணவர் சமுதாயத்தை கேள்விக்குறியாக்கி விடும்  நிலைக்கு அழைத்துச் செல்வது குறித்து பெற்றோர்கள் உறைந்து உள்ளனர்.